
கோவை, நவ.7 (டிஎன்எஸ்)
விவசாயிகளின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்தும் ஏணிப் படிகளாக விஞ்ஞானிகள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் நிலையங்களின் தேசிய அளவிலான கருத்தரங்கிற்குத் தலைமை வகித்து அவர் பேசியதாவது:
வேளாண் வளர்ச்சியின் அடையாளமாகவும், முன்னோடி மாநிலமாகவும் தமிழகம் இருக்கிறது. விவசாயிகளின் அர்ப்பணிப்புடன் கூடிய அயராத முயற்சிதான் இதற்குக் காரணம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம் போன்றவற்றில் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறது.
பயிர் சாகுபடி செயல்முறை விளக்கம், கண்காட்சி, பயிற்சி உள்ளிட்ட விரிவாக்கப் பணிகளின் மூலமாக மேற்குறிப்பிட்ட நோக்கத்தை வேளாண் அறிவியல் நிலையங்கள் நிறைவேற்ற வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டில் உள்ள இயற்கை வளங்களின் நிலையான மேம்பாட்டை பொறுத்தது. சமூக, பொருளாதார, கலாசார ரீதியாக இன்றைய, நாளைய தேவைகளைப் பூர்த்தி செய்ய இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்துவது அவசியம்.
அரசின் கொள்கைகள் செயல்பாட்டுக்கு வருவதில் விஞ்ஞானிகளின் பங்கு முக்கியம். புதிய தொழில்நுட்பங்களை வேளாண் அறிவியல் நிலையங்கள் விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். விவசாயிகளின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்தும் ஏணிப் படிகளாக விஞ்ஞானிகள் செயல்பட வேண்டும்.
வேளாண் உற்பத்தியைப் பெருக்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக, 1967இல் 54 லட்சம் டன்களாக இருந்த உணவு தானிய உற்பத்தி 1976இல் 72 லட்சம் டன்களாகவும், தற்போது 91 லட்சம் டன்களாக உயர்ந்திருக்கிறது.
நெல் உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு 1,450 கிலோவில் இருந்து 3,459 கிலோவாக உயர்ந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு கொண்டுவரப்பட்டபோது கடுமையான எதிர்ப்பு இருந்தது. பண்ணை இயந்திரங்களைப் பயன்படுத்திய பிறகு, உற்பத்தியைப் பெருக்க புதிய இயந்திரங்களை அதிகளவில் அறிமுகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் பெருக்கம், நகரமயமாக்கல் காரணமாக சாகுபடி நிலங்கள் படிப்படியாகச் சுருங்கிக் கொண்டே செல்கின்றன. இச்சூழலில் புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதாக அமைய வேண்டும். பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்குப் பயிற்சியும், ஊக்கமும் அளிக்க வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக துல்லிய பண்ணையம், சொட்டு நீர்ப் பாசனம், பண்ணை இயந்திரமயமாக்கல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பயிர்ச் சேதங்களில் இருந்து விவசாயிகளைக் காக்க 50 சத மானியத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இத் திட்டத்துக்கு இதுவரை ரூ.652 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.
Nov 07, 2009
* Do not use semicolon(;)