சென்னை, நவ.7 (டிஎன்எஸ்)
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் விநியோகம் தொடர்பாக தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி சமையல் எரிவாயுவிற்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.30 மானியத்தை வாபஸ் பெற்றுள்ளது. நியாயவிலைக் கடையில் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு விலையை உயர்த்தியுள்ளது. ஆனால் 40 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்க ரூ.800 கோடி செலவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 60 லட்சம் குடும்ப அட்டைகளில் 40 லட்சம் போலியானவை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. உண்மையான குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம். இதுவரை 85 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்ட பின் மேலும் 40 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு அரசு டெண்டர் அழைப்பு விட்டுள்ளது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.
எனவே தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் விநியோகம் தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு எச்.ராஜா கூறியுள்ளார்.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)