
சென்னை, மார்ச் 10 (டிஎன்எஸ்) ஐ நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (மார்ச் 9) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; 2009-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமைகளை மீறும் வகையில் இலங்கை ராணுவம் செயல்பட்டது தொடர்பாக விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு நாடுகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா வரைவுத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
சென்னை வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் ஐ.நா. தீர்மானம் தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு ஒன்றை பார்த்தேன். மத்தியில் ஆட்சியில் இருப்போர் அந்தக் காட்சிகளை ஒரு முறை பார்த்தாலே தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படும் இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாது, அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என 3-வது முறையாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே மார்ச் 1-ம் தேதி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மார்ச் 2-ல் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். (டிஎன்எஸ்)
Mar 10, 2012
* Do not use semicolon(;)