கோபி, ஏப்.25 (டிஎன்எஸ்) ஈரோடு மாவட்டம் கோபி அருகே அப்பிச்சிமார் மடம் என்ற ஊரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.12 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இங்கு பனியன், ஜட்டி மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள் தயாரிக்கும் மில் உள்ளது. எலக்ட்ரானிக் மிஷின் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்த மில் 3 'பிளாக்'காக செயல்படுகிறது. ஆண்கள்-பெண்கள் என இங்கு 1000 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் 2-வது பிளாக்கில் திடீர் என தீ பிடித்து எரிந்தது. பின்னர் அது பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஈரோடு, கோபி, பெருந்துறை, பவானி ஆகிய ஊர்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
10.30 மணிக்கு எரிய தொடங்கிய தீ விடிய.. விடிய எரிந்தது. இன்று அதிகாலை 5.30 மணிக்குதான் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் விற்பனைக்கு தயாராக நிலையில் வைக்கப்பட்டிருந்த பனியன் மற்றும் துணிகளும், பாதி தயாரான நிலையில் இருந்த துணிகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின்கசிவு காரணமா? அல்லது வேறு காரணமா? என்று தெரியவில்லை.
சேத மதிப்பு ரூ.12 கோடி இருக்கும்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்தில் தொழிலாளர்கள் யாரும் சிக்கவில்லை. அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. (டிஎன்எஸ்)
Apr 25, 2012
* Do not use semicolon(;)