
சென்னை, ஏப்.10 (டிஎன்எஸ்) சென்னையில் இன்று காலமான முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என். வரதராஜன் மறைவிற்கு தமிழகத்தில் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், வரதராஜன் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மக்கள் கருத்துகளை அமைதியான முறையில் எடுத்துரைத்து, தன் பணியை செவ்வனே ஆற்றியவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர், அனைவருடனும் எளிமையாகவும், அன்புடனும் பழகி வந்த வரதராஜன் அவர்களின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், உழைக்கும் மக்களுக்கு உறுதுணையாக விளங்கி மக்களாட்சி மாண்பினை போற்றி மனிதநேய காவலராக திகழ்ந்த என் அருமைத் தோழர் வரதராஜன் அவர்களின் மறைவு காரணமாக சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பாட்டாளி மக்களுக்கும் தோழர்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தோழர் வரதராஜன் அவர்களின் இழப்பு தமிழக அரசியலில் தொழிலாளர் வர்க்கத்திற்கு பெரும் இழப்பு; ஜனநாயகத்திற்கு பெரும் இழப்பு என்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திண்டுக்கல்லில் நூற்பாலை தொழிலாளராக வாழ்க்கையைத் துவங்கிய வரதராஜன், பொதுவுடைமை கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து மக்களுக்காகவும், தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர். அவரது மறைவு இடதுசாரி இயக்கங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று கூறியுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், தோழர் வரதராஜன், மூன்று முறை தமிழக சட்ட பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராகவும் மத்தியக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். தனது வாழ்நாளில் பெரும் பகுதியை பொதுவுடமை லட்சியத்திற்காக அர்ப்பணித்த, அடக்குமுறைகள் பலவற்றை சந்தித்த தோழர் வரதராஜன் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் எம்.பி. விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பொதுவாழ்க்கையில் ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டுமே அதற்கு இலக்கமாகவும், முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர் தோழர் என். வரதராஜன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். (டிஎன்எஸ்)
Apr 10, 2012
* Do not use semicolon(;)