
சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
இளையான்குடி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சுப.மதியரசன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் அதிகாரிக்கும், தி.மு.க. வேட்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்பம், பர்கூர், தொண்டாமுத்தூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் இளையான்குடி தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சுப. மதியரசன் வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியில் போட்டியிட, மக்கள் மாநாடு கட்சி சார்பில் கலைமணி என்பவர் தாக்கல் செய்த மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.
இந்த நிலையில், இளையான்குடி தொகுதிக்கு நடந்த தேர்தல் செல்லாது என உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கலைமணி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், எனது மனுவை முன்மொழிந்தவர்களின் வரிசை எண்களுக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண்களுக்கும் வித்தியாசம் உள்ளதாக கூறி, மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார். வரிசை எண் முரண்பாடு குறித்த சந்தேகத்திற்கு, தேர்தல் அதிகாரியிடம் எங்கள் கட்சித்தலைவர் சக்திவேல் விளக்கம் அளித்தார்.
மனுவை நிராகரித்ததாக வாய்மொழியாக கூறினாலும், உண்மையில் எழுத்து பூர்வமான உத்தரவை வழங்கவில்லை. மனுவை நிராகரித்ததற்கான காரணம் கூறி எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. தேர்தல் அதிகாரியின் சட்டவிரோத செயலினால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தேன்.
சிறிய தவறுகள், முரண்பாடுகள் ஆகிய பிரச்சினைகளுக்காக மனுவை நிராகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதன்படி, எனது மனுவை ஏற்றிருக்க வேண்டும். அதை நிராகரித்தது முறையற்றது. எனவே, எனது மனுவை நிராகரித்தது செல்லாது என உத்தரவிட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.யின் வெற்றி உள்பட அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் ரத்து செய்யவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தேர்தல் அதிகாரிக்கும், தி.மு.க. வேட்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பவும், அதற்கு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனபால் உத்தரவிட்டார்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)