புதுதில்லி, ஏப்.14 (டிஎன்எஸ்) தேசிய பேரிடர் மேலாண்மை துறையில், கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதற்காக, 23 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணை தலைவர் சசிதர் ரெட்டி கூறியதாவது: புயல், வெள்ளம், சுனாமி, நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது, மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதற்காக, 13 வது நிதி கமிஷன், 23 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், 15 ஆயிரம் கோடி ரூபாய், மாநில அரசுகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், நேரடி மானியமாக ஒதுக்கப்படும் என்றார்.
பேரிடர் காலங்களில் சிறப்பான பணிகளை மேற்கொள்ளும் அமைப்புகளுக்கு, 8,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், தீ விபத்துகளும் அதிகரித்துள்ளன. இதற்கு தகுந்தாற்போல் தீயணைப்பு துறையும் பலப்படுத்தப்பட வேண்டும். கிராமப்புறங்களில் ஏற்படும் தீ விபத்தின் போது, மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையிலும், தீயை விரைவாக அணைக்கும் வகையிலும், மீட்பு குழுவினர் அங்கு விரைந்து செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் சசிதர் ரெட்டி தெரிவித்தார். (டிஎன்எஸ்)
Apr 14, 2012
* Do not use semicolon(;)