கொழும்பு, ஏப்.2 (டிஎன்எஸ்) இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுதியில் மீண்டும் விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வெளிநாடு ஒன்றில் சிறப்பு ஆயுதப் பயிற்சி பெற்ற சுமார் 150 விடுதலைப்புலிகள் இலங்கைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மறைந்திருந்து சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இலங்கையின் புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஐலன்ட் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்கு,கிழக்குப் பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளை குழப்பி பிரச்னைகளை உருவாக்குவதும், அழிவுகளை ஏற்படுத்துவதுமே இவர்களின் இலக்கு என்று இலங்கை காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
திருகோணமலை குச்சவெளியில் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த 3 பேரும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றதாக கூறியுள்ளனர்.
இலங்கை திரும்பும் முன்னர் இவர்கள் அந்த நாட்டில் ரகசிய முகாம்களில் ஆயுதப்பயிற்சிகளை பெற்றுள்ளனர். தற்போது மீனவர்களைப் போன்று வேஷம் போட்டுக் கொண்டு வடக்கு,கிழக்கு பகுதிகளில் ரகசிய நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
Apr 02, 2012
* Do not use semicolon(;)