சென்னை, ஏப்.11 (டிஎன்எஸ்) தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.11) சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் பா.வளர்மதி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் குழந்தைகள் மையத்தின் தரத்தை மேம்படுத்தி நல்ல சூழலை உருவாக்கும் வகையில் மையத்தின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேவையான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதை செயல்படுத்தும் வகையில் அரசு கட்டிடங்களில் செயல்படும் 9873 மையங்களுக்கு ரூ.46.15 கோடி செலவில் சிறிய பழுதுகளை மேற்கொள்ளவும், 6202 மையங்களில் ரூ.39.14 கோடி செலவில் பெரிய அளவிலான பழுதுகளை மேற்கொள்ளவும். நடவடிக்கை எடுக்கப்படும்.
20558 மையங்களில் ரூ.12 கோடியே 34 லட்சம் செலவில் ஒரு மின்விசிறி, ஒரு குடில் விளக்கு பொருத்தப்படும். 20244 மையங்களில் ரூ.36? கோடி செலவில் குழந்தைகளுக்கு ஏற்ப கழிப்பிடம் கட்டப்படும். வாடகை கட்டிடங்களில் செயல்படும் மையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆண்டு சத்துணவு திட்டத்திற்காக ரூ.1510 கோடியே 44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி இந்தியாவில் 2 கோடியே 19 லட்சத்து 6 ஆயிரத்து 769 மாற்று திறனாளிகள் உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 16 லட்சத்து 42 ஆயிரத்து 497 மாற்று திறனாளிகள் உள்ளனர்.
2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து தமிழ்நாட்டில் மாற்று திறனாளிகள் பற்றிய சரியான புள்ளி விவரம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
Apr 11, 2012
* Do not use semicolon(;)