கொல்கத்தா, நவ.5 (டிஎன்எஸ்)
நக்சல் பாதிப்பு மாநிலங்களில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவப்படையை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட நிபந்தனைகளை முன் வைத்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு மாவோயிஸ்ட்டுகள் தயாராக இருப்பதாக மாவோயிஸ்ட் மூத்த தலைவர் கிஷென்ஜி இன்று அறிவித்துள்ளார்.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ள கிஷன்ஜி, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவப்படையை மத்திய அரசு முதலில் விலக்கிக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக பழங்குடியினரின் பிரச்சினைகளை மனிதாபிமான வகையில் கையாள வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், சுதந்திரம் பெற்ற நாள் முதல் பழங்குடியினர் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்காக மத்திய- மாநில அரசுகள் பழங்குடியினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங் நேற்று விடுத்த அறிக்கையில், மாவோயிஸ்ட்டுகளின் இதயங்களை வெல்ல வேண்டும் என்று கூறியது குறித்து கேட்டதற்கு, அதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்று பதில் அளித்தார்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)