
சென்னை, நவ.7 (டிஎன்எஸ்)
சென்னையில் மழை நீர் அகற்றும் பணிகளை, துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலையில் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் கனத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் தண்ணீரில் மிதந்து சென்றன. தமிழகத்தில் இதுவரை மழைக்கு 14 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னையில் ஆங்காங்கே தேங்கியுள்ள மழை நீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மழை நீர் அகற்றும் பணிகளை துணை முதமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொட்டும் மழையில் குடைப் பிடித்தபடி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
இன்று காலை சென்னை சத்திய மூர்த்தி நகர் பகுதியில் மழை நீர் அகற்றும் பணிகளை மேற்பார்வையிட்ட அவர், அயோத்தி குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோரும் உடன் சென்றனர்.
இதேபோல் எழும்பூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி பார்வையிட்டு மழை நீர் அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினார்.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)