சென்னை, ஜன.31 (டிஎன்எஸ்) தமிழகச் சட்டப்பேரவையில் இன்று (ஜன.31) உறுப்பினர் பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூ) ஜவஹருல்லா (மனித நேய மக்கள் கட்சி) பவதாரணி (காங்), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) உள்ளிட்ட உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் கே பி முனுசாமி அளித்த பதில் வருமாறு:-
திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குழாய் அமைக்கப்பட்ட இடத்தில் சாலைகள் போடப்படுகிறது. சாலைகள் அமைவதற்கும் முதல்- அமைச்சர் தனியாக நிதி ஒதுக்கி உள்ளார். திண்டுக்கல்லில் புறநகர் பேருந்து நிலையம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முதல்- அமைச்சர் அம்மா அவர்கள் நகராட்சி உள்கட்டமைப்புக்காக 1250 கோடி ஒதுக்கியுள்ளார். எனவே புறநகர் பேருந்து நிலையத்துக்கு இடம் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக பேருந்து நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாநகராட்சியில், கடந்த ஆட்சியின் போது பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் சாலை அமைப்பது போன்ற பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கப்படாததால் சில பணிகள் பாதியிலேயே நின்றன.
தற்போது மதுரையில் சாலை மற்றும் உள்கட்டமைப்புக்காக ரூ.16 கோடி முதல்- அமைச்சர் ஒதுக்கி உள்ளார். எனவே விரைவில் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும். இதுபோல் தேனி, நாகர்கோவில், குளித்தலை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இது தவிர அனைத்து பேரூராட்சிகளிலும் 5 ஆண்டுக்களுக்குள் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்- அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அதன்படி அத்திட்டம் நிறைவேற்றப்படும். அடிப்படை தேவைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். (டிஎன்எஸ்)
Jan 31, 2012
* Do not use semicolon(;)