
ஐதராபாத், ஏப்.9 (டிஎன்எஸ்) இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் பதட்டம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஐதராபாத் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதட்ட அதிகம் நிறைந்த பகுதிகளில் போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் பழைய ஐதராபாத் நகரில் உள்ள மதண்ணாபேட் மற்றும் சைதாபாத் ஆகிய இடங்களில் நேற்று திடீரென இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல் உருவானது. மோதலுக்கு காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. எனினும், பழைய ஐதராபாத் நகரில் குரமகுடா என்னும் இடத்தில் உள்ள அனுமான் கோவிலில் நேற்று பசு இறைச்சியின் துண்டுகள் இருந்ததாகவும், இதன் காரணமாக இரு வகுப்பினருக்கு இடையே மோதல் வலுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல் வன்முறையாக மாறி, அங்கு இருந்த பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த பகுதிகளில் உள்ள தெருக்களில் இருந்து வன்முறை கும்பல் தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டன. இதனால் இங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், இந்த வன்முறை பக்கத்தில் உள்ள சில இடங்களுக்கும் பரவியது. மேலும், அங்கு வன்முறை பரவாமல் இருக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசினர். வன்முறை கும்பலை கலைக்க தடியடியும் நடத்தினர். இந்த வன்முறையில் சுமார் 4 பேர் படுகாயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மதண்ணாபேட் மற்றும் சைதாபாத் ஆகிய ஊர்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே ஆந்திர மாநில முதலமைச்சர் என்.கிரண்குமார் ரெட்டி தலைமையில் உள்துறை மந்திரி சபிதா இந்திரா ரெட்டி ஆகியோர் அடங்கிய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, வன்முறை கும்பல் மீது பாரபட்சம் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுத்து, உடனடியாக அங்கு அமைதி ஏற்படுத்துமாறும் மாநில டிஜிபி தினேஷ் ரெட்டிக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதை அடுத்து, பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவத்தின் துரித நடவடிக்கை குழு குவிக்கப்பட்டது. தற்போது, அங்கு பதற்றம் காணப்பட்டாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். (டிஎன்எஸ்)
Apr 09, 2012
* Do not use semicolon(;)