புதுதில்லி, ஏப்.10 (எடின்எஸ்) அரசின் கொள்கை முடிவு என்பதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை நிர்ணயத்தில் தம்மால் தலையிட முடியாது என்று நேற்று (ஏப்.9) உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
என்று இது தொடர்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதி ஏ.கே.பட்நாயக் ஆகியோர் 'பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயிப்பது சட்டம் இயற்றும் துறையின் அதிகார வரம்புக்குள் வருகிறது. அதற்கு உரிய நிபுணத்துவம் தேவை' என்று கூறினர்.
வழக்குரைஞர் ஜான் மேத்யூ மூலம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி.தாமஸ் தாக்கல் செய்த அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
முன்னதாக கேரள உயர் நீதிமன்றத்தில் தாமஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்த பொது நல மனு விசாரணைக்கு ஏற்கப்படவில்லை என்ற விவரம் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
பெட்ரோல் உள்ளிட்டவை மீதான விலை நிர்ணயத்தில் அரசின் கட்டுப்பாட்டை விலக்கிக் கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து இந்திய இளைஞர் சம்மேளனம் என்கிற தன்னார்வ அமைப்பு அந்த மனுவை தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து தாமஸின் மனு கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாமஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 'நியாயமற்ற வகையில், இஷ்டப்படி' பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயிக்கும் முறை இருப்பதாக அந்த மனுவில் தாமஸ் குற்றம்சாட்டியிருந்தார். 1955-ம் ஆண்டு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் வரும் பெட்ரோலியப் பொருள்களுக்கு நியாயமற்ற விலை நிர்ணயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். (டிஎன்எஸ்)
Apr 10, 2012
* Do not use semicolon(;)