சென்னை, ஏப்.13 (டிஎன்எஸ்) தமிழக அரசு சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி இன்று (ஏப்.13) சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு கபிலர் விருது, உ.வே.சா. விருது, அவ்வையார் விருது ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி வாழ்த்தினார்.
காலையில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகியவை நடந்தன. மதியம் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஜெயலலிதா சரியாக 12 மணிக்கு வந்தார். தமிழ்த்தாய் பாடலுடன் விழா தொடங்கியது. சபாநாயகர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வரவேற்றார்.
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி தமிழ்த்தாய் சிலையையும், புத்தகங்களையும் நினைவு பரிசாக வழங்கினார். பின்னர் தமிழ் அறிஞர்களுக்கு கபிலர் விருது, உ.வே.சா. விருது, அவ்வையார் விருது ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி வாழ்த்தினார். அவர்களுக்கு தங்கப் பதக்கங்களை அணிவித்து பொன்னாடையும் போர்த்தினார்.
கபிலர் விருது முனைவர் மணவாளனும், உ.வே.சா. விருது புலவர் ராசும் பெற்றனர். சிறந்த பெண்மணிக்கான அவ்வையார் விருது திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதிக்கும் வழங்கப்பட்டது. இந்த விருதுகள் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை, 8 கிராம் தங்கப் பதக்கம், தகுதி சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டது. இதுபோல் 2010-ம் ஆண்டில் வெளிவந்த 27 தமிழ் நூல் ஆசிரியர்களும் சிறப்பு செய்யப்பட்டனர்.
சிறந்த தமிழ் நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், அவற்றின் பதிப்பக்கத்தாருக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்கப்பட்டது. இவற்றையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். மதுரை தமிழ்ச் சங்கத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அந்த சங்கத்துக்கு ரூ. 5 லட்சம் பரிசும், விருதும் கொடுக்கப்பட்டது. இறுதியில் தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராம் நன்றி கூறினார்.
விழாவில் அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக 'துறைதோறும் தமிழ்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலை வகித்தார். பழ.கருப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொன்னையன், மேயர் சைதை துரைசாமி, நடிகர் சிவக்குமார், தமிழ்ப் பல் கலைக்கழக துணைவேந்தர் திருமலை, முனைவர் கோமதிநாயகம் ஆகியோர் பேசினார்கள். இதையடுத்து 'முத்திரைப் பதிக்கும் சித்திரை' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
இதை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அமைச்சர் சிவபதி முன்னிலை வகித்தார். புலவர் புலமைப்பித்தன் தலைமையில் நடந்த இந்த கவியரங்கத்தில் கவிஞர்கள் முத்துலிங்கம், பிறைசூடன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், கவிஞர் ரேவதி, யுகபாரதி, தங்க.காமராஜ் ஆகியோர் கவிதை வாசித்தனர். அதை தொடர்ந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிடம் விஞ்சி இருப்பது அஞ்சாத துணிவே, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே என்ற தலைப்புகளில் பட்டிமன்றம் நடந்தது. இதை சபாநாயகர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலை வகித்தார். பட்டிமன்றத்துக்கு பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார்.
'அஞ்சாத துணிவே' என்ற தலைப்பில் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா ஆகியோர் பேசினார்கள். 'அளவற்ற அறிவே' என்ற தலைப்பில் வைகைச்செல்வன் எம்.எல்.ஏ., கவிஞர் எழிலரசி ஆகியோரும், 'நெஞ்சார்ந்த கனிவே' என்ற தலைப்பில் மணிகண்டன், பேராசிரியர் மலர்விழி ஆகியோரும் பேசினார்கள். விழாவையொட்டி, சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திலும் வழி நெடுங்கிலும் தோரணங்கள், பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டிருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. (டிஎன்எஸ்)
Apr 13, 2012
* Do not use semicolon(;)