கெய்ரோ, ஏப்.21 (டிஎன்எஸ்) ராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று (ஏப்.20) எகிப்தில் மீண்டும் கலவரம் வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
எகிப்தில் 32 ஆண்டுகள் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் முபாரக் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து ஆட்சி ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஜனநாயக முறையில் மக்கள் ஓட்டு போட்டு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் முபாரக் பதவி விலகி ஒரு வருடம் ஆகியும் இன்னும் அதிபர் தேர்தல் நடைபெறவில்லை. இதையடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். எனவே அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் போட்டியிட பதவி விலகிய முபாரக்கின் ஆதரவாளர்கள் மனுதாக்கல் செய்தனர். துணை அதிபராக இருந்த சுலைமான், விமானப்படை தலைமை தளபதியும் பிரதமராக இருந்த அகமது ஷபீப், முன்னாள் வெளியுறவு அமைச்சர் அமர் முஷா ஆகியோரும் மனு செய்தனர்.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களில் ஒருவர் மீண்டும் அதிபரானால் வழக்கு விசாரணையில் இருந்து முபாரக் தப்பி விடுவார். எனவே அவர்கள் போட்டியிட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து சுலைமான் மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அகமது ஷபீப், அமர்மூஷா ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டன. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள முபாரக் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர். எனவே ராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று எகிப்தில் மீண்டும் கலவரம் வெடித்தது. நேற்று தொழுகை முடிந்ததும் சுமார் 1 லட்சம் மக்கள் பேரணியாக புறப்பட்டு தலை நகர் கெய்ரோ வந்தனர்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு போராட்டம் நடந்த தக்ரீர் மைதானத்தில் திரண்டு ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் முபாரக் ஆதரவாளர்களை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
Apr 21, 2012
* Do not use semicolon(;)