வளர்ந்த நாடுகளில் உடல் உழைப்பாளிகளுக்கும் நல்ல வருவாய் உண்டு. அமெரிக்காவில் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வோர் டிபார்ட்மெண்ட் கடைகளில் விற்பனையாளர்களாக வேலை செய்பவர்களை விட அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்றால் வியப்பாக இருக்கும். சென்ற வாரம் ஒரு நாள் மகள் வீட்டிற்கு வண்ணம் பூச வந்தவர் ஒருவருடன் ஏற்பட்ட அனுபவத்திற்குப் பிறகு, இந்தியாவிலும் உடல் உழைப்பாளிகளுக்கு இவர்களைப் போல் வாழ்க்கை வசதிகள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனம் எண்ணத் தொடங்கியது.
அமெரிக்காவில் வீடுகளுக்கு வண்ணம் பூசும் தொழிலைச் செய்யும் கம்பெனிகள் உண்டு. இந்தியாவில் போல் சொந்தமாக இயங்கும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். இவர்களும் கம்பெனி போல், செய்த வேலைக்கு பில் போட்டுத் தருவார்கள்; வருமான வரி கட்டுவார்கள். வெள்ளைத் தாளில் எழுதித் தருவதோ, வாயில் தொகையைச் சொல்வதோ இல்லை. மேலும் இவர்களுக்குப் பயிற்சி கொடுத்து சான்றிதழ்கள் கொடுக்க, நிறுவனங்கள் உண்டு. இவர்கள் வேலை செய்யும் வீடுகளில் சேதம் எதுவும் ஏற்படுத்திவிட்டால் அதற்கான ஈட்டுத் தொகையைக் கொடுப்பதற்காக இன்சூரன்ஸும் எடுத்திருப்பார்கள்.
ஒவ்வொரு தொழிலாளியின் வேலைத் தரம் பற்றி, வேலைக்குக் கேட்கும் தொகையின் நியாயம் பற்றி, அவர் குணம் பற்றி எல்லாம் பார்க்க இணைய தளம் இருக்கிறது, நாம் தொழிலாளியைத் தேர்வு செய்ய உதவுவதற்காக. என் மகள் இந்திய முறையில் நண்பர்களின் சிபாரிசின் பேரில் வண்ணம் பூசும் ஒருவரின் தொலைபேசி எண்ணைப் பெற்று அவரைத் தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசினாள். மகளுக்கு வசதிப்படுமா என்று விசாரித்துக்கொண்டு அவர் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வருவதாகக் கூறினார். அதே நேரத்திற்குத் தப்பாமல் வந்து வீட்டைப் பார்வையிட்டார். வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் வண்ணமடிக்க எவ்வளவு தொகை என்று கணக்குப் போட்டுக் கூட்டி அந்தத் தொகையை மகளிடம் கூறினார்.
வேலையை மூன்று பகுதியாகச் செய்ய வேண்டும் என்றும் குளிர் அதிகமாகுமுன் அக்டோ பர் மாதக் கடைசியில் முடித்துவிடலாம் என்றும் கூறி, தொநக்காட்சியில் பருவநிலை அறிவிப்பைப் பார்த்து, மழை இல்லாத நாட்களாகப் பார்த்து (வீட்டின் வெளியே வண்னம் பூச வேண்டியிருந்ததால்) முடிவுசெய்து தொலைபேசியில் தொடர்பு கொள்வதாகக் கூறிச் சென்றார். இந்தியாவில் குறிப்பிட்ட நாளில் வருவதாகக் கூறிச் சென்ற எந்தத் தொழிலாளியும் எனக்குத் தெரிந்து வந்ததில்லை. இவர் சொன்ன மாதிரியே தொலைபேசியில் வரும் நாளைத் தெரிவித்துவிட்டு அன்று வந்து வீட்டின் வெளிச் சுவர்களைக் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி பிளீச் போட்டுச் சுத்தப்படுத்தி முதல் நாள் வேலையை முடித்தார். வேலையை ஆரம்பிக்கும் முன்பே பேசிய தொகையில் மூன்றில் ஒரு பகுதியைக் முதல் நாள் கொடுப்பதாக ஒப்பந்தமாகையால் அதைப் பெற்றுக்கொண்டார்.
இந்தியாவில் வண்ணம் பூசுவோர், சைக்கிளில் வருவார்கள். இப்போதைய தலைமுறை என்றால் மோபெட் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் அமெரிக்க வண்ணம் பூசுபவர் ஒரு பெரிய வேன் போன்ற வாகனம் ஒன்றில் வந்திறங்கினார். மாடிச் சுவர் வரை வண்ணம் பூசுவதற்குத் தேவையான ஏணி, கயிறு முதலிய சாதனங்களைக் கொண்டு வருவதற்காகத்தான் இவ்வளவு பெரிய வாகனத்தில் வந்தார். இவருக்குத் தேவையான எல்லாவற்றையும் இவரே கொண்டு வந்திருந்ததால் எங்களிடம் எதுவும் வேண்டுமென்று கேட்கவில்லை. அமெரிக்காவில் மிகப் பெரிய ஊர்களில் தவிர மற்ற ஊர்களில் பொதுப் போக்குவரத்து சாதனங்கள் இல்லையாதலால் எல்லோரும் காரில்தான் வேலைக்குச் செல்கிறார்கள். இவருக்கு உதவுவதற்கு இவருடன் வந்த இவருடைய மகனும் இன்னொரு உதவியாளரும் தனித் தனி கார்களில் வந்தனர். அவரவர் வேலை முடிந்ததும் உடனே செல்வதற்காக இந்த ஏற்பாடு. வேலை செய்யும்போது இவர்கள் போட்டுக்கொள்ளும் உடைகள் சுத்தமாக இருந்தன.
அந்த வாரத்தில் வேறு நாட்களில் மழை பெய்தாலும் அன்று மழை பெய்யவில்லை. அமெரிக்காவில் வானிலையாளர்கள் கணிக்கும் வானிலை 95 சதவிகிதம் சரியாக இருக்கும். மேலும், இந்தத் தொழிலையே 27 ஆண்டுகள் இவர் செய்து வருவதால் அக்டோ பர் மாதத்தில் பருவநிலை எப்படி இருக்கும் என்பது இவருக்கு அத்துப்படி.
செய்வதாக ஒப்புக்கொண்ட எல்லா வேலையையும் முடித்துவிட்டு, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று எங்களைச் சரிபார்க்கச் சொல்லிவிட்டு, மீதித் தொகையைப் பெற்றுக்கொண்டு மூவரும் சென்றுவிட்டனர். போகும்போது என் கணவருடன் கைகுலுக்கி விடைபெற்றனர்.
வேலை நடந்த அன்று இடையில் நாங்கள் சிறிது நேரம் வெளியே செல்ல நேரிட்டபோது தலைவாசல் கதவிற்கு வண்ணம் பூச வேண்டியிருந்ததால் வீட்டைப் பூட்டாமல்தான் போனோம். இவர்களை நம்பி வீட்டை விட்டுவிட்டுப் போகலாம்.
அவர்கள் சென்ற பிறகு இந்தியாவில் ஒரு முறை வீட்டிற்கு வண்ணம் பூசிய அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது. அவர்கள் வரும்போது போட்டுக்கொண்டு வந்த உடைகளே அப்படியொன்றும் சுத்தமான ஆடைகள் இல்லை. அதன் பிறகு வேலையை ஆரம்பிப்பதற்கு முன் போட்டுக்கொண்ட உடைகள் அவற்றைவிட சாதாரணமாக இருந்தன. மதிய உணவிற்காக அவர்கள் கொண்டுவந்த உணவும் அப்படியொன்றும் சிறப்பாக இல்லை. சாதாரணமாக இப்படிப்பட்ட தொழிலாளர்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்தால் வீட்டிலிருக்கும் உணவு, தோட்டத்தில் விளையும் பழங்கள் என்று எதையாவது கொடுக்க நினைப்பேன்.
அமெரிக்காவில் வண்ணம் பூசுபவர்கள் வேலைக்கு வருவதாக அறிந்ததும் முதலில் அந்த நினைவுதான் வந்தது. ஆனால் நொடியில் இப்போது இருப்பது அமெரிக்காவில், இங்கு இப்படிப்பட்ட பழக்கம் எதுவும் கிடையாது, அவர்கள் நாம் கொடுக்கும் உணவைப் பெற்றுக்கொள்ளும் நிலையிலும் இல்லை, பெற்றுக்கொள்ளவும் மாட்டார்கள் என்பது ஞாபகத்திற்கு வந்தது. அது மட்டுமல்ல இவர்கள் எங்கள் மகளின் வீட்டைப் போன்ற வசதியான வீடுகளில் இருப்பார்கள். வேறு வாழ்க்கை வசதிகளும் இவர்களுக்கு இருக்கும். ஊட்டமான உணவு இவர்களுக்குக் கிடைக்கும். வேலையிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு உல்லாசப் பயணம் சென்று வரமுடியும்.
இப்படி உடல் உழைப்பால் ஊதியம் பெறுவோர்களும் அமெரிக்காவில் வசதியாக வாழ்கிறார்கள். வெள்ளைச் சட்டை போட்டு உத்தியோகம் பார்ப்பவர்களுக்குத்தான் வசதி என்ற நிலை இல்லை. இந்த நிலை இந்தியாவிலும் ஏற்பட எவ்வளவு காலம் ஆகும்?
Nov 06, 2009
* Do not use semicolon(;)