சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு கேட்ட ஒரு நகைச்சுவைத் துணுக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு பக்தர் இரண்டாம் உலகப் போருக்குப் பின் படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் ஒவ்வொரு நாடும் எப்போது முழுமையாக முன்னேறும் என்று கேட்டாராம். முதலில் ஜப்பான் பற்றிக் கேட்டபோது ஐந்து வருடங்கள் என்றாராம். அடுத்து ஜெர்மனி பற்றிக் கேட்டபோது பத்து வருடங்கள் என்றாராம் பிரம்மா. பின் இந்தியா எப்போது முழுமையான முன்னேற்றம் அடையும் என்று கேட்டபோது பிரம்மா எழுந்து நின்று விம்மி விம்மி அழ ஆரம்பித்தாராம். ஏன் பிரம்மா அழுகிறார் என்று பக்தர் கேட்டபோது, இந்தக் கேள்விக்கு எனக்கே விடை தெரியவில்லை என்றாராம் பிரம்மா. இப்போது எனக்கும் இந்த நிலைமைதான் ஏற்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு முறை தாயகம் திரும்பும்போதும் இந்தியாவின் ஜன நெரிசல், சுத்தமின்மை, எங்கும் ஊடுருவியிருக்கும் ஊழல், ஒழுங்கின்மை ஆகியவை முகத்தில் அறைந்து, இந்தியா வந்திருக்கிறோம் என்பதை நினைவுபடுத்தும். அமெரிக்கப் பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகளும் இந்தியாவும் சீனாவும் தங்களை முந்திவிடும் போல் இருக்கின்றன என்று பிதற்றிக்கொண்டிருக்க, இந்தியாவில் நிலைமை இப்படி இருக்கிறது. சீனாவில், இந்தியாவைப் போல் இத்தனை ஏழை மக்கள் இல்லையா, இத்தனை ஊழல் இல்லையா என்று அங்கு சென்றுதான் பார்க்க வேண்டும்.
இந்தியா ஒளிர்கிறது என்று பி.ஜே.பி கட்சி ஆட்சி செய்தபோது பெருமையடித்துக்கொண்டிருந்தது. இப்போது காங்கிரஸ் இன்னொரு வகையாகப் பெருமையடித்துக்கொண்டிருக்கிறது. ஆம், செல்போன்கள் அதிகரித்திருக்கின்றன. இன்டெர்நெட் க·பேக்கள் கூடியிருக்கின்றன. இவை எல்லாம் முன்னேற்றம் என்று எடுத்துக்கொண்டால், வறியவர்களுக்கு மிக அத்தியாவசியமான உணவுப் பொருள்களின் விலை எக்கச்சக்கமாக ஏறியிருக்கிறது. சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் இந்தப் பண்டங்களை எப்படி வாங்குகிறார்கள் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. விலைவாசி உயர்ந்த அளவிற்கு இவர்களின் வருமானம் உயரவில்லை.
காலையில் தெருவில் நடந்து சென்றால் வீட்டுவேலை செய்பவர்கள் ஒவ்வொரு வீட்டின் முன்பும் பெருக்குவது, கழுவுவது போன்ற வேலைகளை இன்னும் செய்துகொண்டிருப்பது கண்ணை உறுத்துகிறது. இவர்கள் பெறும் சம்பளத்தைக் கேட்டால், கண்ணில் தண்ணீர் வந்துவிடும். இன்னொரு வீட்டிற்குப் போய் அவர்கள் வீட்டைப் பெருக்குவது, அவர்கள் அழுக்குத் துணிகளைத் துவைப்பது, அவர்கள் எச்சில் பாத்திரங்களைக் கழுவுவது போன்ற இழிந்த வேலைகளை மிகக் குறைந்த சம்பளத்திற்குச் செய்யும் இந்தப் பிரிவு, இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்தியாவில் இருக்கும்? வீட்டு எஜமானிகள் கொடுக்கும் மிஞ்சிய உணவுப் பதார்த்தங்களைப் பெற்றுக்கொண்டு அவர்கள் கொடுக்கும் பழைய துணிகளை உடுத்திக்கொண்டு வாழ்க்கை நடத்தும் இவர்கள் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இப்படி வாழப் போகிறார்கள்? இவர்களுடைய வாழ்க்கையில் எப்போது மாற்றம் வரப் போகிறது?
ஒரு சமூகத்தில் பொது இடங்களைச் சுத்தம் செய்வதற்கு ஆட்கள் வேண்டும்தான். ஆனால் அவர்களுக்கு நல்ல சம்பளமாவது கொடுக்க வேண்டும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்காக உழைக்கும் நிலையை மாற்றுவது கடினம்தான். தாங்களாகத் தங்களைக் கவனித்துக்கொள்ள முடியாதவர்கள், நோயால் பீடிக்கப்பட்டவர்கள் ஆகியோரைக் கவனித்துக்கொள்ள ஆட்கள் வேண்டும்தான். ஆனால் அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் ஓரளவாவது அவர்கள் வசதியாக வாழ்வதற்கு வகை செய்வதாக இருக்க வேண்டுமல்லவா? வளர்ந்துவிட்ட நாடுகளில் இம்மாதிரி வேலைகளைச் செய்பவர்களுக்கு, மற்றவர்களைப் போன்று சமூக அந்தஸ்து இல்லையென்றாலும், வாழ்க்கை வசதிகளாவது ஓரளவு கிடைக்கின்றதே.
இப்படி வீட்டுவேலை செய்பவர்கள் சமூகத்தின் கடைசிப் படியில் இருப்பவர்கள். இவர்களுக்கு மருத்துவ விடுமுறை உட்பட எந்த விடுமுறையும் இல்லை, ஓய்வூதியச் சம்பளம் இல்லை. ஒரு நாள் உடல்நலம் குன்றி வேலைக்குப் போகாவிட்டால் சம்பளமும் இல்லை, சாப்பாடும் இல்லை. இப்படி ஒரு பிரிவு இந்தியாவிலிருந்து ஒழிந்தால்தான் இந்தியா செழிக்கிறது என்று சொல்லாம்.
வறியவர்களுக்கு இதைச் செய்கிறோம், அதைச் செய்கிறோம் என்று பீற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகள் எப்போதும் போல் மக்களை பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் தகிடுதத்தங்களும் எப்போதும் போல் இருக்கின்றன. ஜனநாயக நாடான இந்தியாவில் எப்போது உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்கும்?
எந்தச் சடங்கு என்றாலும் பிராமணர்களை வைத்துச் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்று நம்பும் மக்களின் மடமை எப்போது இந்த மண்ணிலிருந்து மறையும்? அல்லது மறையவே மறையாதா?
மாறாத இன்னொன்று, ஆண்கள் எந்த இடத்தையும் கழிப்பறையாக உபயோகிப்பது. ஓரளவு படித்தவர்கள் கூட இதைச் செய்கிறார்கள். தேவையான பொதுக் கழிப்பறைகளை உருவாக்கிக் கொடுக்கத் தவறிவிட்ட நகராட்சியைக் குறைகூறி அவர்களை மன்னிக்க வேண்டுமா, என்ன? பெரிய பெரிய கட்டடங்கள் வணிக நிலையங்களாக முளைத்திருக்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கும் சிப்பந்திகளுக்கும் அங்கு கழிப்பறை கிடையாது.
பசியில் குப்பையைக் கிளறும் மாடுகளும் நாய்களும் இன்னும் எத்தனை காலம் இந்த மண்ணில் வாழப் போகின்றன? மனிதர்களைப் பற்றியே அக்கறை கொள்ளாத நம் சமூகம் மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறது?
மாறியிருப்பதாக எதையாவது கூற வேண்டுமென்றால் சாலைகளில் வாகனங்களின் பெருக்கத்தைத்தான். ஆனால் சாலை விதிகளைப் பின்பற்றாதது மாறவில்லை. சாலை விதிகளை மீறுபவர்கள் இப்போது அதிகமாகவே மீறுகிறார்கள் எனலாம். வளர்ந்துவிட்ட நாடுகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தும் அங்கு விபத்துகளின் எண்ணிக்கை நம் நாட்டை விடக் குறைவு என்பார்கள். சாலை விதிகள் பற்றியே கவலைப்படாத வாகன ஓட்டுநர்கள் இருக்கும் இங்கு விபத்துகளின் எண்ணிக்கை இவ்வளவுதானா என்று எனக்கு வியப்பாக இருக்கிறது.
வாரத்தில் ஏழு நாட்களும் தினமும் இரண்டு தடவை மின்சார சப்ளை ரத்து செய்யப்படுகிறது. இந்த லட்சணத்தில் இந்தியா ஒரு வல்லரசாகப் போகிறதாம். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வைக்க முடியாத ஒரு ஜனநாயக அரசு, நாட்டை வல்லரசாக்கப் போவதாகக் கூறுவதை ஒரு நகைச்சுவைத் துணுக்கு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Jun 29, 2011
* Do not use semicolon(;)