பண்டிகை என்றாலே தி நகர் தான். இப்போது தீபாவளிக்கு இங்கு கூடும் கூட்டத்தைச் சொல்லி மாளாது.
இன்று நேற்றல்ல. காலம் காலமாக கடைத்தெரு என்றாலே தி நகர் தான். திருமணமா? தி நகர். வீட்டில் பண்டிகையா? தி நகர். தீபாவளியா? தி நகர். பொங்கலா? தி நகர். கார்த்திகையா? தி நகர். ரம்ஸானா? தி நகர். கிறிஸ்துமஸ் பண்டிகையா? தி நகர்.
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், சென்னையில் எல்லா இடங்களிலும் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், பாத்திரக் கடைகள், மளிகைக் கடைகள் உள்ளன. இருந்தாலும், பண்டிகை என்றால் அனைத்துப் பகுதி மக்களும் வருவது தி நகர் தான்.
சென்னையிலிருந்து மட்டுமா? புதுவை, விழுப்புரம், வேலூர், ஏன், தென் தமிழகத்திலிருந்தும் பண்டிகைச் சாமான் வாங்க, தி நகர் தான் வருவாங்க.அதை விடுவோம். கேரளம், கர்ணாடகம், ஆந்திரா என, பக்கத்து மாநிலங்களில் இருந்தும் தி நகர் தான் வருகிறார்கள்.
ஏன், வெளிநாடுகளிலிருந்தும் ஜவுளி, நகை வாங்க தி நகர் தான்.
அப்படி வெளியே எங்கும் இல்லாதது தி நகரில் என்ன தான் இருக்கிறது? என்ன தான் சொன்னாலும், நமது தி நகருக்குச் சென்று சாமான்கள் வாங்குவதில் ஒரு தனி இன்பம், தனி மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. டிஸ்னி லேண்டு மாதிரி இன்னொரு டிஸ்னி லேண்ட் உருவாக்கிவிடலாம். ஏன், இப்போது, திருப்பதி ஆலயம் போலவே ஒரு ஆலயத்தைச் சென்னையில் அமைக்கப் போகிறார்களாம். ஆனால், தி நகரைப் போல இன்னொரு தி நகர் அமைக்க முடியுமா என்ன?
தி நகருக்கு என்று ஒரு பண்பாடே உள்ளது. ஒரு தனி மணம், தனி உயிர்த்துடிப்பு. என்ன தான் நெரிசல் இருந்தாலும், நாம் செல்லும் வாகனத்தை நிறுத்த முடியுமோ முடியாதோ, தி நகருக்குப் போய் வாங்கினால்தான் மனதிலும் நிறைவு, கையிலும் நிறைவு, பண்டிகையிலும் நிறைவு.
ஹெச்.ராமகிருஷ்ணன்
Oct 22, 2011
* Do not use semicolon(;)